அறிமுகம்
ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறை கைதியால் பாப்பிலான் (Papillon) என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் 1969 இல் வெளிவந்த இந்த சுயசரிதை புத்தகம் பின்னர் ஆங்கிலத்தில் ஜூன் .பி. வில்சன் & வால்டேர் .பி. மைகேல் என்பவர்களால் 1970 இல் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனை உலகில் சக்கை போடு போட்டது. பின்னர் "Franklin J. Schaffner" இயக்கி ஹாலிவுட் புகழ் "Steve McQueen" & "Dustin Hoffman" நடித்து "Papillon" என்ற பெயரில் 1973 இல் திரைப்படமாக வெளிவந்தது.
ரா. கி. ரங்கராஜன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு "பட்டாம்பூச்சி" குமுதத்தில் தொடராகவும் வெளியாகி வந்தது.
நூலின் சுருக்கம்
செய்யாத கொலை குற்றத்திற்காக ஆயூள் தண்டனை பெற்று தீவாந்தர சிறையில் அடைக்கபடுகிறான் ஹென்றி ஷாரியர். சில நாட்களுக்குள்ளேயே க்ளுசியாட் ஜோன்ஸ், அண்ட்ரே மாசுரட் என்னும் இரு நண்பர்களுடன் தப்பிவிடுகிறான்.
வழியில் காடுகளில் சந்தித்த ஒரு மனிதனின் உதவியால் தொழுநோய் கைதிகள் வசித்துவந்த ப்ளூ தீவுகளுக்கு சென்று அவர்களின் உதவியால் ஒரு நல்ல படகை பெற்றுக்கொண்டு மரோனி ஆறு வழியாக கடல் மார்கமாக ட்ரினிடாட் பயணமாகிறான்.
அங்கே போவன் என்ற ஆங்கிலேயரின் உதவியும், டச்சு பிஷப்பின் உதவியும் கிடைக்கிறது. மேற்கொண்டு பயணத்தை தொடர்ந்து செல்லும் நிலையில் கொலம்பியா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுகிறான்.
அங்கேயிருந்து அன்டோனியா என்ற கைதியுடன் தப்பி கோவஜீரா சிவப்பிந்தியர்களிடம் செல்கிறான். அவர்கள் அவனை ஏற்று கொள்கிறார்கள். எட்டு மாத காலம் அவர்களுடன் வசிக்கிறான். லாலி, ஜொரைமா என்று இரு பெண்களையும் மணக்கிறான்.
பின்னர் தன் சிறை தண்டனைக்கு காரணமானவர்களை பழி வாங்க வேண்டி கோவஜீரா சிவப்பிந்தியர்களிடமிருந்து விடை பெற்று செல்கிறான்.
போகும் வழியில் சந்தித்த கன்னிகா ஸ்திரீகள் உதவி செய்வதாக கூற, அவர்களுடன் சாண்டா மார்டா தேவாலயத்திற்கு சென்று அங்கே தங்க நேரிடுகையில் யாராலோ காட்டி கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பாரங்க்விலா என்னும் கொடுமையான சிறையில் அடை பட்டு பின்னர் மீண்டும் பிரெஞ்சு கயானா சிறைக்கே திருப்பி அனுப்பப்படுகிறான்.
தப்பிய வழக்கு விசாரிக்கப்பட்டு இரண்டு வருட கடுங்காவல் தனிமை சிறையில் அடைக்கபடுகிறான். பின்னர் அவன் வாழ்வில் மீண்டும், மீண்டும் போராட்டங்களும், தப்பும் முயற்சிகளுமே. சிறையில் எதையும் தாங்கும் இதயத்தோடு எல்லாவற்றையும் எதிர்கொள்கிறான்.
நண்பர்களிடையே அசாத்திய செல்வாக்கு படைத்தவன் பட்டாம்பூச்சி. 11 வருடங்களுக்கு பிறகு டெவில் தீவிலிருந்து சில்வேன் என்பவனுடன் தப்பி பின்னர் அவனையும் இழந்து கடைசியில் சீன நண்பனான கியுக் கியுக் என்பவனுடன் படகின் உதவியால் ஜார்ஜ் டவுன் வந்தடைகிறான். அங்கே தன் நண்பர்களான சில முன்னாள் கைதிகளை சந்திக்கிறான்.
அவர்கள் நேர்மையாக வாழ்வது கண்டு தானும் அதுபோல் வாழ முடிவு செய்கிறான். அவ்வாறே வாழ்ந்தும் வந்தான். அவனது பிற்கால வாழ்க்கையை பற்றியும், சமுதாயத்தில் தான் ஒரு நேர்மையாக வாழ மேற்கொண்ட போராட்டங்களை பற்றியும் "BANCO" என்றொரு நூலில் எழுதியுள்ளான்.
நூலை பற்றி:
சுமார் 800 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் சுதந்திர வேட்கையும், வீரமும் நிறைந்த மனிதனது வரலாறு. பட்டாம்பூச்சி படும் கஷ்டங்களும், அவனது தீராத சுதந்திர வேட்கையும், நண்பர்களிடையே அவனுக்குள்ள மிகுந்த செல்வாக்கும், துன்பங்களை அவன் எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் அவன் மன துணிவும், யார்க்கும் பணியாத அதே சமயம் யாரையும் பகைத்து கொள்ளாத அவன் சாமர்த்தியமும் நம்மை வியக்க வைக்கிறது.
அதே சமயம் அவன் தனிமை சிறையில் இருக்கும் பொழுது தன் குடும்பத்தை பற்றியும் இன்னும் பல நல்ல நினைவுகளையும் எண்ணிக்கொண்டு கற்பனை வானில் பறக்கிறான். அதை அவன் வர்ணிக்கும் போது நமக்கே கண்ணீர் வந்து விடுகின்றது.
சிறையில் அவனுடைய நண்பர்களான தேகா, கால்காணி, சீரா, க்ரண்டேட், மாத்யு போன்றவர்களையும் நம்மால் மறக்க இயலவில்லை. இந்நூலில் பட்டாம்பூச்சியின் கதை மட்டும் அல்லது அங்காங்கே சில கைதிகளை பற்றிய கிளை கதைகளும் உண்டு.
மொத்தத்தில் இந்த நூல் காதல், வீரம், சுதந்திரம், தத்துவம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய மிக சிறந்த காவியம். எத்தனை முறை படித்தாலும் சலிக்காது.
No comments:
Post a Comment