Saturday, September 26, 2009

சீமான் ஜாமீனில் விடுதலை

செல்வாக்குள்ள யார் எதை வேண்டுமானாலும் பேச வாய்ப்பளிக்கும் இந்தியா இவர்களுக்கெல்லாம் ஒரு வசமான நாடு. போராடும் சீமான் எதற்கு நிபந்தனைக்கு இணங்கி ஜாமீனில் வெளி வர வேண்டும்? நிபந்தனை என்றால் அடி பணிந்தேன் என்றல்லவா அர்த்தம்.


சீமானை போல் வேறு ஒரு சாதாரண குடி மகன் பேசினால் இங்கே உயிரோடு இருக்க முடியுமா? மேலும் இந்தியாவை போல் சர்வாதிகார நாடு உலகில் உள்ளதா என்று வேறு அவர் கேட்டதாக நான் எங்கோ படித்தேன். சீமான் சவுதி அரேபியா போன்ற நாடுகளை பார்த்து உள்ளாரா? அங்கே எல்லாம் சரியோ தவறோ... நாட்டிற்கு எதிராக பேசினால்... அவர் அடையாளமே மறைக்கப்பட்டிருக்கும்.


ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. செல்வாக்கு உள்ளவர் எதையும் பேசலாம். அதை நம்பி நாம் உணர்ச்சி வசப்பட்டால் சிலர் போல் நம்பிய குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டு போக வேண்டியது தான். நாம் யார் என்று உலகுக்கும் தெரியாது. சீமானின் சொல்படி  பார்த்தால் இலங்கை இந்தியாவை விட மேல் தானே?


சீமான் இலங்கை சென்று அங்கே தனதுயிரை பணயம் வைத்து போராடுவரானால் நான் இங்கே எழுதியதற்காக வருத்தமும் வெட்கமும் அடைந்து நொந்து போவேன். ஆனால் மிகவும் பாதுகாப்பான இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு இவ்வாறு கூக்குரலிடும் அவர் போன்ற நடிகர்களை என்ன சொல்வது?


உணர்ச்சி வசப்படும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற ஆட்கள் தொடர்வார்கள். வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் தம் மக்களுடன் தங்கி, தலைவராக மட்டும் அல்லாது அடித்தட்டு தொண்டனை போல், ஒரு சாதாரண வீரனை போல் மக்களுடன் செயல் பட்டு களத்தில் உயிர் நீத்த மாபெரும் போராளி. மாபெரும் வீரர். தன் மகனையும் போர் களத்தில் இழந்தவர்.


ஆனால் வேளைக்கும் உண்டு, காரில் பவனி வரும் சீமானெல்லாம் அவர் பொருட்டு புகழ் அடைவது என்னால் பொறுக்க முடியவில்லை. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்து விட்டால். அன்று ஹிந்தி எதிர்ப்பு... இன்று ஈழ விடுதலை... இவை காரணமில்லாமல் அப்பாவி மக்களின் உயிரை இங்கேயும் குடிக்கும் என்பதை விட, வேறு என்ன சொல்ல?


இன்று ஹிந்தி எதிர்ப்பு போர்களை நடத்தி மக்களை பலி போட்டவர்கள் பல்லக்கில் பவனி வருகிறார்கள். அப்பாவி இலங்கை மக்களை காக்க காலம் வரும். விடியும். சீமானலேல்லாம் என்ன செய்து விட முடியும்? அவர் என்ன சேகுவாரா-வா மார்டின் லூதரா? அதற்கெல்லாம் தியாக மனப்பான்மை வேண்டும். இவர் பேசுவார்... சிறை செல்வார்... ஜாமீனில் வெளி வருவார். பின்னர் ஒரு எம்.எல்.ஏ / எம்.பி./அமைச்சர் ஆவார். இது தான் நடக்கும். பா. ம. க. ராமதாஸ் (கோயபல்ஸ்) போல் இது போன்ற எத்தனை பேரை பார்த்து விட்டோம்?


சாதாரண மக்களே!!! தயவுசெய்து உங்களுக்கு ஆதாயம் இல்லையெனில், இவர்கள் பேச்சுக்கு உணர்ச்சி வசப்பட்டு உங்கள் பொன்னான நேரத்தையும், வாழ்வையும் வீணடித்து விடாதீர்கள். தன்னால் பிறர் ஆதாயம் தேட வழி செய்து கொடுக்கும் மனிதன் ஒரு இளிச்சவாயன். சுதாரியுங்கள்... பிறர் பின் சென்று கொடி பிடித்து பயன் ஏதும் இல்லை. இந்தியாவில் "Strongest Will Survive" என்ற கூற்றுதான் உண்மை. அவர்கள் மட்டும் மென்மேலும் முன்னேறி பலனும் புகழும் அடைவார்கள். கொள்கையும் இல்லை ஒரு மண்ணும் இல்லை.