Sunday, October 25, 2009

பயண அனுபவங்களின் பாதை வெளிச்சங்கள்

டாக்டர். க.ப. அறவாணன் எழுதிய இந்நூலை சில தினங்களுக்கு முன் படிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல், பிற நாட்டினரின் குணநலன்களோடு தமிழக மக்களின் குணத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. தனது கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்காக செனகல், பிரான்ஸ், ஐரோபிய நாடுகள், மற்றும் பல நாடுகளில் தங்கி அங்குள்ள மக்களிடயே பழகி, அவர்தம் வாழ்க்கை முறையை கூர்ந்து கவனித்து அவற்றை நம் தமிழரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு இந்நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர். நாம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் கொடிய நாகரீகமற்ற பழக்க வழக்கங்களை ஆதங்கத்தோடும் அதே சமயம் மெல்லிய நகைச்சுவையோடும் சாடியுள்ளார். நம்மிடையே இருப்பது குண ஏழ்மை என்கிறார் நூலாசிரியர். இது தமிழர் யாவரும் படிக்க வேண்டிய நூல். இந்நூலின் ஆசிரியர் குறிபிட்டுள்ள தமிழர்களின் குண ஏழ்மை என்ன என்பதை சுருக்கமாக பட்டியலிடுகின்றேன்கண்ட இடங்களில் எச்சில் துப்புதல் : கண்ட இடங்களில் எச்சில் துப்புதல் என்பது தமிழரிடையே மட்டுமல்லாது நம் நாட்டில் யாவரிடமும் பரவி உள்ள ஒரு கொடும் பழக்கம் ஆகும். "எச்சிலை இங்கே துப்பு" என்ற வாசகத்துடன் மணல் நிரப்பப்பட்ட பெட்டிகள் தெருவெங்கும் வைத்திருந்தாலும், தெருவிலும், பேருந்தில் செல்லும் போது பிறர் மேலும் எச்சில் துப்பும் கொடிய பழக்கம் நம்மிடம் உள்ள ஒரு குண ஏழ்மை. தெருவெங்கும், கட்டிடங்கள்தோறும் வெற்றிலை போட்டு உமிழ்ந்த காவி நிற வண்ணங்கள் வேறு. இதை தேசிய பழக்கமாக வேறு எந்த நாட்டிலும் காண இயலாது என்கிறார் நூலாசிரியர்.
திரை அரங்குகளில் ஊளை இடுதல் : தமக்கு பிடித்த காட்சிகள் வரும் போதோ, நடிகர் வரும் போதோ சினிமா அரங்குகளில் ஊளை இடுதல் மற்றுமொரு கொடும் பழக்கம் ஆகும்.
தனி மனித வழிபாடு : தனி மனிதர்களை வழிபாடு செய்வது இங்கே பரவி உள்ள மற்றொரு குண ஏழ்மை.
கோள் புனைதல் : நம்மிடையே இக்கொடும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. திருவள்ளுவரே 2000 ஆண்டுகளுக்கு முன்பே இதை "அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறல் என்றல் இனிது" என்று சாடியுள்ளார். அலுவலகங்களில் மேலதிகாரிகளிடம் கோள் புனைதல் போன்றவை மற்றுமொரு கொடும் பழக்கம் ஆகும். மேலை நாட்டினர் பிறர் பற்றி அவர் இல்லாத போது பேசுதலை மிகவும் நாசுக்காக தவிர்த்து விடுகின்றனர்.
பெண்டிரை கேலி செய்தல்: இப்பழக்கம் குறித்தும் நூலாசிரியர் மிக விளக்கமாக அனுபவ உண்மையுடன் விளக்குகிறார்.
தெருச்சண்டை இடுதல்: குழாயடிச்சண்டை என்பது சென்னைக்கே உரியது அல்லது பொதுவான பழக்கமன்று. ஏழை, தண்ணீர் பஞ்சம் நிறைந்த ஆப்பிரிக்க நாடுகளில் கூட பெண்கள் நீண்ட தொலைவு சென்று தங்கள் தண்ணீர் தேவைகளை அமைதியான முறையில் நிறைவேற்றிகொள்கிறார்கள் தவிர ஒருபோதும் தெருச்சண்டையை பார்த்ததில்லை என்கிறார் ஆசிரியர்.
பிச்சைகாரர்கள் : இந்த அவலத்தையும் தெளிவாக சாடியுள்ளார்.
போக்குவரத்து விதிகளை மதியாமை போக்குவரத்து விதிகளை மதியாமை, கால்நடைகள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுதல் போன்றவை நமது நாட்டுக்கே உரித்தானது.
பொது இடங்களில் கைதட்டி அழைத்தல் : பொது இடங்களில் 'ஏலே' என்றோ 'டேய்' என்றோ, 'machaan' என்றோ விளித்து கூட்டத்தில் எல்லாரும் திரும்பி பார்க்க, கூப்பிட்டவர் அசடு வழிய 'உங்களை இல்லீங்க அவரைங்க' என்பதுவும் ஒட்டுமொத்த தெருவும் குழம்புவதும் இங்கே மட்டும் தான் காண முடியும். கேரளாவில் பிறரை 'உஸ்...உஸ்' என்று கூப்பிடும் அநாகரீகமான பழ்க்கம் படித்தவரிலிருந்து பாமரர் வரை பரவியுள்ளது. மேலை நாடுகளில் அழகாக பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.
இவை மட்டுமல்லாது பல குண ஏழ்மைகளை மிக நல்ல முறையில் சுட்டிக்காட்டியுள்ள ஆசிரியர் அவற்றை போக்கும் வகையில் பல நல்ல அறிவுரைகளை எழுதியுள்ளார். என் மனம் இந்நூலில் சுட்டியுள்ளவை யாவையும் உண்மை என்று ஒப்பு கொண்டது. நீங்களும் படித்து பாருங்களேன்.

No comments:

Post a Comment